சீனாவின் குவாங்சி வட்டாரத்தில் சட்டவிரோதப் ‘பிரமிட்’ திட்டத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 52 சிங்கப்பூரர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சும் காவல் துறையும் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
வெளிநாடொன்றில் ஆக அதிக எண்ணிக்கையில் சிங்கப்பூரர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை.
குவாங்சி பகுதியில் நடத்தப்பட்ட சட்ட அமலாக்க நடவடிக்கையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சீன அதிகாரிகளின் விசாரணை தொடர்வதால், மேலதிக விவரங்களை அறிய சிங்கப்பூர்க் காவல் துறை சீன அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் அந்தக் கூட்டறிக்கையில் அவை கூறின.
இது தொடர்பாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.
அதில் பேசிய வெளியுறவு, உள்துறைக்கான இரண்டாம் அமைச்சர் சிம் ஆன், பெய்ஜிங்கில் உள்ள சிங்கப்பூர் தூதரகம், குவாங்சோவில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் தடுப்புக் காவலில் இருக்கும் 52 பேரையும் மூன்று முறை நேரில் சந்தித்து நலன் விசாரித்ததாகத் தெரிவித்தார்.
அத்துடன், அவர்களின் குடும்பத்துக்குத் தகவல் அனுப்புவது, நிர்வாகச் செயல்முறைகளில் உதவுவது போன்றவற்றில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் திருவாட்டி சிம் ஆன் கூறினார்.
சிங்கப்பூர் அரசு பிற நாடுகளின் சட்ட திட்டங்களிலும் நீதித்துறை நடவடிக்கைகளிலும் தலையிடாது என்பதை வலியுறுத்திய அவர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளோருக்குத் தேவையான தூதரக உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றார்.
