மலேசியாவின் கெடா கூருன் – ஜெனியாங் சாலையில் லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்துக்குள்ளானதில் 12 வயதான ஆறாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், 14 வயது சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிளில் 12 வயது மாணவன் பின்னால் அமர்ந்து சென்றுள்ளான்.
சம்பவ இடத்தில் சிவப்பு விளக்கு எரிந்ததால், முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென நின்றது. இதையடுத்து, லொறி ஓட்டுநர் இடதுபுறமாக விலக முயன்றபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் லொறியின் பின்புறத்தில் மோதியது.
இதில், மேட்டார் சைக்கிளின் பின்புறம் இருந்து மாணவன் லொறியின் பின்புறச் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிய 14 வயது சிறுவன் லேசான காயங்களுக்கு மட்டுமே உள்ளாகியுள்ளான்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
