சோமாலியா அருகே 20 பணியாளர்களுடன் கடத்தப்பட்ட  கப்பலை மீட்டது இந்திய கடற்படை

சோமாலியாவின் ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட அசினி என்ற மீன்பிடி கப்பலை இந்திய கடற்படை வெற்றிகரமாக மீட்டது. மேலும், கப்பலில் இருந்த 20 பணியாளர்களும் எவ்வித பாதிப்பும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். கடற்படையின் இந்த செயலுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படை தகவலின்படி, ஆயுதமேந்திய கடற்கொள்ளையர் குழு ஒன்று கடந்த மாதம் இந்த மீன்பிடி கப்பலை கடத்தியது. அப்பகுதியில் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான தாய் கப்பலாக இதை பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கடல்சார் பாதுகாப்புக்கு இது பெரும் அச்சுறுத்தலாக இருந்ததால், மீன்பிடி கப்பலை மீட்கும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டது. தனது போர்க்கப்பல் ஒன்றையும், கடல்சார் கண்காணிப்பு விமானம் ஒன்றையும் களமிறக்கி, கடத்தப்பட்ட கப்பலைக் கண்டறிந்து பின்தொடர்ந்தது. தொடர் கண்காணிப்புக்குப் பிறகு, கடற்படையினர் வன்முறையற்ற, அதேநேரத்தில் உறுதியான உத்திகளைக் கையாண்டு அந்த கப்பல் தப்பிச் செல்ல முடியாதபடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நடவடிக்கைக்காக, இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்த விமானத்தின் மூலம் கடற்படையின் சிறப்பு அதிரடிப்படையினர் துல்லியமாக அந்த கப்பலுக்குள் இறக்கப்பட்டனர்.

கடற்படையின் அதிரடிப்படையினர் மின்னல்வேகத்தில் செயல்பட்டு கப்பலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தலை முறியடித்தனர். இதன்மூலம் கப்பலில் இருந்த 20 பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடற்படையின் இந்த அதிரடி செயல்பாட்டை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மும்பையில் இருந்து 3 ஆயிரம் கி.மீ. தொலைவில், அரபிக் கடலில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட அசினி என்ற மீன்பிடி கப்பலில் இருந்த 20 பணியாளர்களையும் 48 மணி நேர ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக மீட்ட இந்திய கடற்படைக்கு எனது வாழ்த்துகள்.

இந்திய விமானப்படையின் சரியான நேரத்திலான ஆதரவுடன், ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பலையும் பணியாளர்களையும் விரைவாகக் கண்டறிந்து, இடைமறித்து, பத்திரமாக மீட்டது, இந்திய கடற்படையின் உயர் செயல்பாட்டுத் தயார்நிலையையும் கடல்சார் அச்சுறுத்தல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் அதன் திறனையும் வெளிப்படுத்துகிறது.

எங்கள் துணிச்சலான பணியாளர்கள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உயர்களைப் பாதுகாப்பதிலும், கடல்சார் பாதுகாப்பை நிலைநாட்டுவதிலும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதிலும் இந்தியாவின் திறன், நோக்கம் மற்றும் உறுதியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். பாதுகாப்பான கடல் சூழலையும் சுதந்திரமான திறந்த மற்றும் பாதுகாபான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தையும் உறுதி செய்வதில் இந்தியா தொடர்ந்து உறுதியுடன் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles