உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக சுயாதீன வழக்கு தொடுநர் பணிமனையை அமைக்க வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தியுள்ளது.
சட்ட மா அதிபரின் பணிமனையில் நலன்சார் முரண்பாடுகள் இருக்கலாம். எனவே, சுயாதீன வழக்கு தொடுநர் பணிமனையை அமைக்குமாறு கோருகிறோம் என்று கொழும்பு பேராயர் பணிமனையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
17ஆம் திகதி நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், சாட்சிகள் மிரட்டப்பட்டனர் என்று தகவல்கள் வந்துள்ளன. இந்தத் தாக்குதல்களுக்கு உளவுப் பிரிவுகள், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை சேர்ந்த சகல உறுப்பினர்களையும் குறைகூறமுடியாது. உளவுப் பிரிவுகள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை சேர்ந்த சில உறுப்பினர்கள் மட்டுமே இதற்கு பொறுப்பானவர்கள் என்றும் கூறினார்.
