கனடாவில் இந்திய மாணவர் உட்பட இருவரை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ரொறன்ரோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் தண்டனை கூடாது என்று குற்றவாளி சார்பில் முன்வைக்கப்பட்ட வாதம் நிராகரிக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த 21வயதுடைய இளைஞன் கடந்த 2022ஆம் ஆண்டு படிப்புக்காக கனடாவின் ரொறன்ரோ நகருக்குச் சென்றுள்ளார்.
அங்கு சென்ற சில மாதங்களில் ரயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கனடாவைச் சேர்ந்த ரிச்சர்ட் எட்வின் என்பவர் அவரை பின்புறமாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளார். இரு நாள்களில் மேலும் ஒருவரை அவர் இதேபோல சுட்டுக்கொன்றார்.
கொலை செய்யப்பட்ட இருவருமே கொலையாளிக்கு எவ்விதத்திலும் அறிமுகமானவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ரிச்சர்ட் எட்வினை பொலிஸார் கைது செய்தனர். 4 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்றுவந்த நிலையில் அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ரொறன்ரோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தனக்கு மனச்சிதைவு பாதிப்பு இருந்ததை காரணம் காட்டி தண்டனை வழங்கக் கூடாது என்று குற்றவாளி தரப்பில் வாதிடப்பட்டது. எனினும், இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.
