மின்சார வாகனங்கள், மின்கலங்கள், வடிவமைப்பு மற்றும் மென்பொருள் தொழில்நுட்பங்களில் சீன நிறுவனங்கள் காட்டி வரும் அசுர வளர்ச்சி காரணமாக, உலகப் புகழ்பெற்ற அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய சிற்றூந்து நிறுவனங்கள் சீனச் சந்தையில் தங்களது இடத்தை இழந்து பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.
தானியங்கி உற்பத்தி முறைகளும், மென்பொருள் உருவாக்க வேகமும் ஒரு காலத்தில் சீனச் சந்தையை ஆக்கிரமித்திருந்த வெளிநாட்டு நிறுவனங்களை பின்தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காயில் உள்ள அதிநவீன தானியங்கி தொழிற்சாலையைப் பார்வையிட்ட பிறகு, “இதற்கு எதிராகப் போட்டியிட நமக்கு எந்த வாய்ப்பும் இல்லை” என்று ஹோண்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தோஷிஹிரோ மிபே தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆதிக்கம் என்பது வெறும் சிற்றூந்துகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ரோடியம் குழுமத்தின் அறிக்கையின்படி, 315 க்கும் மேற்பட்ட தயாரிப்புப் பிரிவுகளில் சீனா உலகிலேயே அதிகப்படியான ஏற்றுமதியைச் செய்கிறது.
இதில் பெரும்பாலானவை மின்சார வாகனங்களுக்கான மின்கலங்கள், உதிரிபாகங்கள் மற்றும் உற்பத்தி இயந்திரங்களுடன் தொடர்புடையவை ஆகும்.
சீனாவில் நிலவும் குறைந்த மின்கல உற்பத்திச் செலவு மற்றும் விரிவான விநியோகச் சங்கிலி காரணமாக, மிகவும் முன்னேறிய நாடுகளை விட சீனாவில் ஒரு சிறிய மின்சார எஸ்.யு.வி சிற்றூந்தை தயாரிப்பது குறைந்தது 30 வீதம் மலிவானது என சர்வதேச எரிசக்தி முகமை மதிப்பிட்டுள்ளது.
சீனாவின் இந்த அசுர வளர்ச்சிக்கு அந்நாட்டு அரசாங்கம் பல ஆண்டுகளாக வழங்கி வரும் பில்லியன் கணக்கிலான டொலர்கள் மானியமே முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மானியங்கள் சந்தையைச் சீர்குலைப்பதாக ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் கடுமையாக விமர்சித்த போதிலும், சீன நிறுவனங்கள் வேகமாக வளரவும் விலைகளைக் குறைக்கவும் இது உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
