பாரிஸில் பொலிஸாரை கத்தியால் குத்த முயன்ற ஈழத் தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸின் புறநகர் பகுதியான சென்-சென்-டெனிஸ் மாவட்டத்தின் பொபினி நகரில் நேற்று சனிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருகையில்,
அடுக்குமாடிக் குடியிருப்பில் அயல் வீட்டாரிடையே மோதல் நடப்பதாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு மூன்று பொலிஸ் அதிகாரிகள் சென்றனர்.
பொலிஸார் அங்கு சென்றபோது அயல் வீட்டார் இருவரை குறித்த நபர் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். பொலிஸார் வருவதைப் பார்த்த அந்த நபர், தனது இரண்டு கைகளிலும் ஒவ்வொரு கத்தியுடன் ஆக்ரோஷமாக அவர்களை நோக்கி வந்துள்ளார். ஆபத்தை உணர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், முதலில் அந்த நபரை காலால் உதைத்துப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
இருப்பினும், அந்த நபர் மீண்டும் அதிகாரிகளை நோக்கிக் கத்தியுடன் மீண்டும் பாய்ந்துள்ளார். வேறு வழியின்றித் தற்காப்புக்காக அந்த அதிகாரி துப்பாக்கியால் அந்த நபரின் வயிற்றுப் பகுதியில் குறைந்தது இரண்டு முறை சுட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
படுகாயமடைந்த அந்த நபருக்கு அவசர மருத்துவப் படையினர் சம்பவ இடத்திலேயே தீவிர சிகிச்சையளித்தும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கத்திக்குத்தில் காயமடைந்த அவரின் அயல் வீட்டார் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்துப் பொபினி அரசவழக்கறிஞர் பணிமனை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
