இங்கிலாந்தின் முன்னாள் கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டு, பின்னர் இரத்து செய்யப்பட்ட ருவாண்டா அகதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச நீதிமன்ற வழக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
இரத்து செய்யப்பட்ட அகதிகள் புகலிட ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானிய அரசு ருவாண்டாவுக்கு மில்லியன் கணக்கான பவுண்ஸ்களை இழப்பீடாக வழங்கத் தேவையில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பை நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிரந்தர நடுவர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக வருபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பி, அங்கேயே அவர்களின் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் திட்டத்தை முன்னாள் அரசு கொண்டு வந்தது. ஆனால், பிரதமர் கியர் ஸ்டார்மர் தலைமையிலான புதிய தொழிலாளர் கட்சி அரசு பொறுப்பேற்றவுடன் இந்தத் திட்டத்தை இரத்து செய்தது.
இத்திட்டத்தின்படி, பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளைப் பராமரிக்க ருவாண்டாவுக்கு பிரித்தானியா பணம் செலுத்த வேண்டும்.
இந்த ஒப்பந்தம் திடீரென இரத்து செய்யப்பட்டதால் தங்களுக்குக் குறைந்தது 60 மில்லியன் பவுண்ஸ்கள் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்று ருவாண்டா கோரியிருந்தது.
இருப்பினும் மூன்று நீதிபதிகள் கொண்ட நடுவர் மன்ற அமர்வு இந்த நிதியுதவிக் கோரிக்கைகளை முற்றிலும் நிராகரித்துள்ளது.
கடந்த 2024 நவம்பரில் இரு நாடுகளுக்கும் இடையே பரிமாறப்பட்ட இராஜதந்திர குறிப்புகளின்படி 2025, 2026 ஆகிய ஆண்டுகளின் ஏப்ரல் மாதங்களில் பிரித்தானியா வழங்கவிருந்த கூடுதல் தொகைகளைக் கோர மாட்டோம் என்று ருவாண்டா ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
