2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் தொடக்கப் போட்டியில் மெக்சிக்கோ வெற்றி பெறும் என்று மெக்சிகோவின் குவாடலஹாரா உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு யானைகள் ‘கணித்துள்ள’ சம்பவம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உலகக் கிண்ண போட்டியை முன்னிட்டு உயிரியல் பூங்கா நிர்வாகம் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில், சிறிய மைதானம் போன்ற பகுதியில் மெக்சிகோ மற்றும் தென்னாபிரிக்கா தேசியக் கொடிகள் வைக்கப்பட்டிருந்தன. இரு பகுதிகளிலும் யானைகளுக்கான புல் உணவுகள் வைக்கப்பட்டன.
அதன்பின் விடுவிக்கப்பட்ட இரண்டு யானைகளும் நேராக மெக்சிகோ கொடி வைக்கப்பட்டிருந்த பகுதியை நோக்கி சென்று அங்கிருந்த உணவைத் தேர்ந்தெடுத்தன. இதனை அங்கிருந்த பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், உலகக் கிண்ண தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி பெறும் என்ற நகைச்சுவையான ‘கணிப்பு’ ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
இந்த சம்பவம், 2010 தென்னாபிரிக்கா உலகக் கிண்ண போட்டியின்போது தனது துல்லியமான கணிப்புகளால் உலகப் புகழ் பெற்ற ‘போல்’ என்ற ஒக்டோபஸை மீண்டும் நினைவூட்டியுள்ளது. அப்போது போல் கணித்த பல போட்டி முடிவுகள் சரியாக அமைந்ததால் உலகம் முழுவதும் கவனம் பெற்றது.
