பிரித்தானியாவின் ஒரு பகுதியாக உள்ள வடக்கு அயர்லாந்தின் தலைநகர் பெல்பாஸ்டில் கத்திக்குத்து தாக்குதலைத் தொடர்ந்து குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன.
40 வயதுக்கு மேற்பட்ட ஒருவர்மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் அவர் ஒரு கண்ணை இழந்ததுடன், பலத்த காயங்களுக்கும் உள்ளானார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 30 வயதுடைய சூடான் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கத்திக் குத்துத் தாக்குதலைத் தொடர்ந்து பெல்பாஸ்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. பின்னர் அவை வன்முறையாக மாறின. இதன்போது, வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அத்துடன், வீடுகளும் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வன்முறைகளில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வன்முறையில் ஈடுபட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, வடக்கு அயர்லாந்தில் ஏற்பட்ட இந்தக் கலவரம் ஸ்கொட்லாந்துக்கும் பரவியுள்ளது. கிளாஸ்கோ, எடின்பரோ நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து அமைதியைப் பேணுமாறு அரசியல் தலைவர்கள் மக்களை கோரியுள்ளனர். இனவெறி, வெறுப்புணர்வுகளுக்கு மக்கள் இடமளிக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
