வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் அதிகாரிகள் பங்களா முன்பாக இன்று எட்டாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப் பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகின்றது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே உள்ளன.
இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படவில்லை. காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் , இன்றும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அதேவேளை, எதிர்வரும் 15ஆம் திகதி இப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில் அன்றைய தினம் மாவட்ட செயலகம் முன்பாக பெரும் போராட்டத்தை முன்னெடுக்கக் காணி உரிமையாளர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
