ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 6 தங்கம்

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று ஒரே நாளில் இந்தியா 6 தங்கப்பதக்கங்கள் வென்றது. குத்துச்சண்டையில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஹாட்ரிக் தங்கப் பதக்கம் வென்றனர். அதேவேளையில் வில்வித்தை, மல்யுத்தம், மகளிர் ஹாக்கியிலும் இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் கிடைத்தது.

20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 14-வது நாளான நேற்று மகளிருக்கான குத்துச்சண்டையில் 75 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் 5-0 என்ற கணக்கில் சீனாவின் ஸியி பாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

மகளிருக்கான 65 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பர்வீன் ஹூடா 3-2 என்ற கணக்கில் பாரிஸ் ஒலிம்பிக் சாம்பியனான சீன தைபேவின் சென் நியென்னை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான குத்துச்சண்டையில் 80 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அங்குஷ் பங்ஹால், தென் கொரியாவின் கிம் மின்சியோவை எதிர்கொண்டார். இதில் அங்குஷ் பங்ஹால் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

வில்வித்தையில் மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் அங்கிதா பகத், கீர்த்தி ஷர்மா, 17 வயதாகும் குங்கும் மொஹோத் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி, 10 முறை ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியா அணியை 5-3 (54-54, 56-56, 55-51, 54-54) என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது.

மல்யுத்தத்தில் ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில்இந்தியாவின் சுஜீத் கல்கல், உஸ்பெகிஸ்தானின் அப்துல் மஜித் குடியேவை எதிர்த்து விளையாடினார். தொடக்கத்தில் அப்துல் மஜித் குடியேவ் ஆதிக்கம் செலுத்தியதால் அவரது கிடுக்கிப்பிடியில் சிக்கி சுஜீத் கல்கல் தடுமாறினார். இதனால் சுஜீத் கல்கல் 2-9 என பின்தங்கியிருந்தார்.

அதன் பின்னர் ஆக்ரோஷமாக செயல்பட்ட சுஜீத் கல்கல் தொடர்ச்சியாக தனது உடும்பு பிடியால் அப்துல் மஜித் குடியேவை மடக்கினார். முடிவில் சுஜீத் கல்கல் 10-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா – சீனா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. இந்திய அணி தரப்பில் 10-வது நிமிடத்தில் லால்ரெம்சியாமி வெற்றிக்கான கோலை அடித்து இருந்தார்.

44 ஆண்டுக்குப் பிறகு…

ஆசிய விளையாட்டில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. தங்கப் பதக்கம் வென்றதன் வாயிலாக 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் அணி நேரடியாகத் தகுதி பெற்றது.

ஆசிய விளையாட்டு போட்டியின் 14-வது நாளின் முடிவில் இந்தியா 16 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம் என 76 பதக்கங்களை வென்று 5-வது இடத்துக்கு முன்னேறியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles