Sangathy
News

அரச இரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 வருட சிறைத்தண்டனை

Pakistan: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில்  எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரச இரகசியங்களை கசியவிட்ட வழக்கில், அவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் PTI கட்சியின் துணைத் தலைவர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு அரச இரகசியங்களை கசியவிட்ட குற்றத்திற்காக (Cipher Case) 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமராக இருந்த போது, இம்ரான் கானை பதவி நீக்க அமெரிக்கா சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பான இரகசிய ஆவணத்தை இம்ரான் கான் திருப்பித் தரவில்லை என வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இன்று இம்ரான் கான் மற்றும் அவரது தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் துணை தலைவர் குரேஷிக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி (Pakistan Tehreek-e-Insaf – PTI) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து, பிற கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமரானார்.

அவரது தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகிய முக்கிய கட்சி ஒன்று, எதிர்க்கட்சியுடன் இணைந்தது. இதனால் பாராளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்றார். பதவி இழப்பிற்கு பிறகு இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் கடந்த 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அவர் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டபோது வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், விலையுயர்ந்த பொருட்களை விற்று கிடைத்த பணத்தை மோசடி செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில், அந்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்று உறுதி செய்த நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கியது. மேலும் அவர் அரசியலில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித தேர்தலிலும் போட்டியிட இயலாத வண்ணம் தகுதியிழந்தார். இதையடுத்து, பரிசுப்பொருள் வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், இம்ரான் கான் மீது நில மோசடி, கருவூல ஊழல் மற்றும் அரச இரகசியங்களை கசியவிட்டது உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

Related posts

ரயில்வே திணைக்கள மறுசீரமைப்பு தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை

Lincoln

அரச வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது – இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம்

John David

க.பொ.த உயர் தர, சாதாரண தர பரீட்சைகளுக்கான தரங்களை மாற்ற அரசாங்கம் திட்டம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy