Sangathy
Cinema WorldLatest

கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்… : சிம்பு பிறந்த நாள் சிறப்பு..!

தமிழ் சினிமாவின் சகலசகலா வல்லவனாக வலம் வருகிறார் நடிகர் சிலம்பரசன். இவரின் 40வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. வாரிசு நடிகர் என்ற பிம்பம் ஆரம்பத்தில் சிம்பு மீது விழுந்தாலும் அதைத் தகர்த்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவனான’ சிம்பு குறித்து பார்க்கலாம்.

கதை, திரைக்கதை,வசனகர்த்தா, இயக்கம், நடிப்பு, பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என பல்துறை வித்தகர் டி.ராஜேந்தர். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்று தனது தந்தை போலவே சிறுவயதிலேயே நடிப்பார்வம் கொண்டவராக விளங்கினார் சிம்பு. அப்பாவால் சினிமாவிற்குள் நுழைவது எளிதான காரியமாகவே இருந்தது. அந்த சிறுவயதில் படப்பிடிப்புச் சூழல், பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் சலுகை என அந்தப் பருவத்தில் தனது படப்பிடிப்புத் தளங்களில் மகிழ்ச்சியாகவே நேரம் செலவிட்டார் சிம்பு.

’என் தங்கை கல்யாணி’ படம் மூலமாகத் தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய சிம்புவின் க்யூட்டான நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என டைட்டிலில் கொண்டாடப்பட்ட சிம்புவை மக்களும் வரவேற்றனர்.

குழந்தை நட்சத்திரமாக வெற்றிக் கொடி நாட்டிய சிலம்பரசன் ‘காதல் அழிவதில்லை’ படம் மூலமாக கதாநாயகனாக சிம்புவாக அறிமுகமானார். ஆனால், கதாநாயகனாக சிம்புவின் பயணம் அத்தனை எளிதானதாக இல்லை.

’கோவில்’, ‘தம்’, ‘குத்து’, ‘அலை’ என அவரது ஆரம்ப காலப் படங்கள் காதலையும், விடலைப் பருவ பையன் போன்ற துடுக்குத் தனத்தையும் இளமைத் துள்ளலையும் கொண்டிருந்தது. ஆனால், திரையில் நடிகர் சிம்புவின் மிகை நடிப்பும், இரட்டை அர்த்த வசனங்களும் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை.

இந்தப் படங்களுக்கு பிறகு அவர் நடித்த ‘மன்மதன்’ படம் இதுநாள் வரையில் சிம்பு நடித்தப் படங்களில் இருந்து வேறுபட்டதாக இருந்தது. சினிமாவில் தனக்குப் பிடித்த கதாநாயகியான ஜோதிகாவுடன் நடித்தார். காதலில் ஏமாற்றும் பெண்களை கொலை செய்யும் ஒரு கதாபாத்திரத்திலும் அதை வேண்டாம் என்று சொல்லும் கதாபாத்திரம் ஒன்று என அண்ணன் – தம்பியாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் சிம்பு.

மன்மதன் படம் கொடுத்த வெற்றி அவரை இளைஞர்கள் மத்தியில் ‘மன்மதனாக’ மாற்றியது. இத்தனை நாட்கள் நடிகராக ரசிகர்களுக்கு பரிச்சியமான நடிகர் சிம்பு அடுத்து ‘வல்லவன்’ படம் மூலம் இயக்குநராகவும் அவதாரமெடுத்தார். இந்தப் படம் அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. நடிகை நயன்தாராவோடு காதலில் விழுந்தார் சிம்பு. இந்தப் படத்தில் நடிகை நயன்தாராவோடு திரையில் காட்டிய நெருக்கம் பரபரப்பாக பேசப்பட்டது. படத்திற்கு அப்பாலும் இவர்கள் காட்டிய நெருக்கம் புகைப்படமாக இணையத்தில் கசிந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயமே இவர்களுக்குள் புகைச்சலை ஏற்படுத்தி பின்பு பிரிவுக்கும் வழிவகுத்தது. நயன்தாராவுக்குப் பிறகு நடிகைகள் வரலட்சுமி, ஹன்சிகா மோத்வானி, நிதி அகர்வால் எனப் பலருடனும் காதல் கிசுகிசுக்கப்பட்டு நிஜ மன்மதனாக வலம் வந்தார் சிம்பு.

கடந்த 2006ஆம் ஆண்டிற்குப் பிறகு ‘வல்லவ்ன்’ படத்திற்கு பின்பு வெளியான படங்கள் அனைத்துமே சிம்புவுக்கு இறங்குமுகமாகவே அமைந்தது. அதன் பிறகு 2010ஆம் ஆண்டு வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் சிம்புவின் கம்பேக் படமாக அமைந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் சிம்புவும் தனி மனிதனாக பக்குவம் அடைந்திருந்தார். ஆனாலும், அதன் பிறகு வெளியான ‘வாலு’, ‘இது என் ஆளு’ போன்ற படங்களும் பெரிதாக சோபிக்கவில்லை. மீடியாவில் உளறல் பேச்சு, படங்களை சரியாக தேர்வு செய்யாதது போன்ற பல விஷயங்கள் நடிகர் சிம்புவுக்கு அவரது கரியரில் பெரும் தடையாக இருந்தது. நடிப்பு, இயக்கம், இசை, பாடல் எனப் பல்துறை வித்தகராக இருந்தும் அவருக்கு படங்கள் சறுக்கலாகவே அமைகிறதே என ‘உச்’ கொட்டாதவர்கள் இல்லை.

இப்படியான சூழ்நிலையில், கொரோனா காலத்தில் உடல் எடைக் கூடிப் போய் சிறிது தூரம் ஓடிப் போனாலே மூச்சு வாங்கும் அளவுக்கு இருந்தார் சிம்பு. ஆனால், இதையே சவாலாக எடுத்துக் கொண்டு, லாக் -டவுண் காலங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையைக் குறைத்தார். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இன்னும் இளமையாக மாறினார் நடிகர் சிம்பு.

இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் பக்குவமாக… இன்னும் உற்சாகமாக சினிமா மட்டும்தான் இனி என்ற நோக்கத்தோடு வந்தவரை சினிமா மீண்டும் வாரி அணைத்துக் கொண்டது. ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார். இப்போது தனது 48 ஆவது படத்திற்காகவும் தீவிர உழைப்பைப் போட்டுள்ளார்.

வேறு எந்த நடிகரையும் சினிமா நிராகரித்து, மீண்டும் அரவணைத்தது கிடையாது… சிம்புவை மட்டும் கடல் அலை போல… தள்ளி விட்டு தள்ளி விட்டு மீண்டும் வெற்றி மகுடன் சூட்டி அழகு பார்க்கிறது தமிழ் சினிமா. இத்தனை தோல்விகளையும் தாண்டி சிம்புவின் ரசிகர்கள் தங்கள் நாயகனை இன்னமும் தாங்கி பிடிக்கிறார்கள். தியேட்டரில் ஒவ்வொரு சிம்பு பட ரிலீஸின் போதும் திருவிழா தான். அது பணம் கொடுத்து கூட்டுகிற கூட்டமல்ல… கெட்டவன் என பேரு எடுத்த நல்லவனுக்கு தானாய் சேர்ந்த ரசிகர்கள் கூட்டம்.

நாற்பதாவது வயதில் ’அட்மேனாக’ மீண்டும் ‘வல்லவ’னாக சினிமாவில் வலம் வர சிம்புவுக்கு வாழ்த்துகள்!

Related posts

விஷால் உடம்பில் 109 தையல் : இதுக்கு எல்லாம் காரணம் அந்த ‘டார்லிங்’ தானாம்..!

tharshi

மீண்டும் இணையும் தனுஷ் – ஐஸ்வர்யா..!

Lincoln

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இலங்கை அணி அறிவிப்பு..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy