Sangathy
India

பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை தூக்கமில்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து சிங்காநல்லூர் பஸ் நிலையம் முன்பு பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-

“ஏப்ரல் 19-ஆம் திகதி நீங்கள் போடுகிற ஓட்டு தான் நாம் மோடிக்கு வைக்கிற வேட்டு.

இந்த முறை பா.ஜ.க.வை விரட்டி அடித்து விட்டு, இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது. அதற்கு ஆரம்ப புள்ளியாக தமிழ்நாடு இருக்கப்போகிறது. 39-க்கு 39 வெற்றி நாம் தான் வெற்றி பெற போகிறோம்.

மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கியாஸ் சிலிண்டர் விலை ரூ.400-க்கு விற்பனையானது. தற்போது கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் பிரதமர் மோடி தான்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கு கொடுக்கப்படும். பெட்ரோல் லிட்டர் ரூ.75-க்கும், டீசல் லிட்டர் ரூ.65-க்கும் கொடுக்கப்படும் என வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். செம்மொழி பூங்கா பணிகள் விரைந்து முடிக்கப்படும், கலைஞர் நூலகம் கட்டி முடிக்கப்படும். நகை தொழில் புத்துயிர் பெறுவதற்கு புதிய சிட்கோ பூங்கா அமைக்கப்படும், ஜி.டி.நாயுடு பெயரில் அறிவியல் ஆய்வு மையம் அமைத்து தரப்படும். சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி காட்டுவோம்.

2021-ல் தமிழக மக்கள் எல்லாரும் வாக்களித்து, ஆதரித்து, இவர் தான் முதலமைச்சராக வர வேண்டும் என மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் பதவியில் அமர வைத்தனர்.

தவழ்ந்து, தவழ்ந்து சென்று முதலமைச்சர் ஆனவர் தான் எடப்பாடி பழனிசாமி. கடைசியில் தன்னை முதலமைச்சர் ஆக்கியவரின் காலையும் வாரி விட்டதுடன், அவர் யார் என்று கேட்டவர் தான் பழனிசாமி.

சசிகலாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பச்சை துரோகம் பண்ணியவர் தான் எடப்பாடி பழனிசாமி. கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை என அனைத்து உரிமைகளையும் பா.ஜ.கவிடம் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்து விட்டார்.

இப்போது தேர்தல் வந்ததும். பா.ஜ.க.வுடன் இருந்தால் நமக்கு வரக்கூடிய 10 ஓட்டுகளும் வராது என்பது தெரிந்ததும், நாங்கள் பா.ஜ.க.வில் இருந்து பிரிந்து விட்டோம் என நாடகம் ஆடுகிறார்கள். அவர்களின் நாடகத்தை மக்கள் யாரும் நம்பி விடாதீர்கள்.

2021-ல் கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்தபோது தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அந்த கால கட்டத்தில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. ஒன்றே ஒன்று பண்ணினார். எல்லாரும் விளக்கு ஏற்றுங்கள். மணி அடியுங்கள். மணி அடித்தால் கொரோனா வைரஸ் ஓடி விடும் என்று சொன்னார். அதனை தவிர வேறு எதனையும் அவர் செய்யவே இல்லை.

ஆனால் நமது முதலமைச்சர், கொரோனா காலகட்டத்தின்போது கோவைக்கு வந்து, இங்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்ததுடன், அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார். இந்தியாவிலேயே முதல் முதலமைச்சராக கொரோனா வார்டுக்குள் தைரியமாக சென்று ஆய்வு செய்தவர் தான் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதல் வாக்குறுதியாக பெட்ரோல் விலையை ரூ.3 ஆக குறைப்பேன் என்று முதலமைச்சர் சொன்னார். அதன்படியே ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து போட்டு சொன்னதை செய்து காட்டினார். அதேபோல் ஆவின் பால் விலையையும் ரூ.3 குறைத்து நடவடிக்கை எடுத்தார்.

மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தையும் முதலமைச்சர் கொண்டு வந்தார். இப்போது எங்கு பார்த்தாலும் பிங்க் பஸ் தான். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், திருநங்கைகள் அனைவருக்கும் இலவசமாக பயணித்து வருகிறார்கள். இப்போது அந்த பஸ்சை யாரும் பிங்க் பஸ் என்று அழைப்பதில்லை. ஸ்டாலின் பஸ் என்றே அழைக்கிறார்கள். அந்தளவுக்கு இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.

எப்படி ஒரு திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை பெண்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் இந்த திட்டத்தின் வெற்றி. திராவிட மாடல் அரசின் வெற்றி. அரசு ஒரு திட்டத்தை கொண்டு வருவது பெரிய விஷயம் அல்ல. அதனை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்பது தான் முக்கியமானது.

பள்ளி படிப்பை முடித்து விட்டு, கல்லூரி படிக்க செல்ல வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் புதுமைப்பெண் திட்டம். அரசு பள்ளியில் படித்து கல்லூரிக்கு சென்று படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதுவரை 3 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். கோவையில் ஒவ்வொரு மாதமும் 17 ஆயிரம் மாணவிகள் பயன் பெறுகிறார்கள்.

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் நமது முதலமைச்சரால் கொண்டு வரப்பட்டது தான் காலை உணவு திட்டம். தரமான காலை உணவு கொடுத்து, தரமான கல்வியை கொடுப்பது தான் நமது திராவிட மாடல் அரசு. இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு நாளும் 18 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.

இந்த திட்டத்தை கர்நாடகாவிலும் செயல்படுத்தியுள்ளனர். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்படுவது தான் திராவிட மாடல் அரசு. கோவை மாவட்டத்தில் மட்டும் தினந்தோறும் 80 ஆயிரம் குழந்தைகள் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

இதேபோல் மகளிர் உரிமைத்தொகை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி ஒரு கோடியே 18 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இன்னும் 5 மாதங்களில் அனைத்து பணிகளும் சரி செய்யப்பட்டு, விடுபட்ட அனைத்து தகுதியுள்ள இல்லத்தரசிகளுக்கும் மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கொடுக்கப்படும்.

10 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்டு வரும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு ஏதாவது செய்துள்ளரா? கொரோனா பாதிப்பு, சென்னை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அப்போது பிரதமர் தமிழகத்திற்கு வந்து மக்களை சந்தித்தரா? வரவே இல்லை.

தமிழ்நாட்டின் வரிப்பணத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு இழப்பீடு தொகை கொடுத்தது. மத்திய அரசிடம் பேரிடர் நிதியை கொடுங்கள் என கேட்டு வருகிறோம். ஆனால் இதுவரை அவர்கள் வரை ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. அவரை இனிமேல் பேரை சொல்லி அழைக்காதீர்கள். 29 பைசா என்று தான் சொல்லி அழைக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி வரி, கூட்ஸ் அண்ட் சர்வீஸ் வரி கட்டுகிறோம். நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், மத்திய அரசு அதனை பகிர்ந்து நமக்கு ஒரு ரூபாய் திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் நமக்கு திருப்பி தருவது 29 பைசா தான். ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் கூடுதலாக கொடுக்கிறது.

பிரதமர் மோடி போகிற இடமெல்லாம் ரோடு ஷோ நடத்துகிறார். ரோடு ஷோ நடத்தும் பிரதமரை மக்கள் ரோட்டிற்கு தான் அனுப்ப போகிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வை தமிழகத்திற்குள் அனுமதிக்கவே இல்லை. ஆனால் அவர் இறந்த பின்னர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் புகுந்தது. நீட் தேர்வால் இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்கப்படும் என தி.மு.க.வும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். காங்கிரசை சேர்ந்த ராகுல்காந்தியும் நெல்லை கூட்டத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.

பா.ஜ.க.வின் பொய் பிரசாரத்தை மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் சேர்ந்து காலி செய்து விட்டனர். பா.ஜ.கவின் பொய் பிரசாரம் தமிழகத்தில் எடுபடாது.

பிரதமர் மோடி கடந்த 10 நாட்களாக தமிழகத்தையே சுற்றி சுற்றி வருகிறார். தேர்தலுக்காக மட்டுமே அவர் வருகிறார். தேர்தலுக்கு தேர்தல் அவர் நாடகம் ஆடி வருகிறார். 2019-ல் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவோம் என கூறியிருந்தனர். ஆனால் இன்று வரை மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்கவில்லை.

தி.மு.க. தலைவர், தி.மு.க.வினருக்கு தூக்கம் போய்விட்டது என்று பிரதமர் மோடி சொல்லி வருகிறார். ஆமாம் எங்களுக்கு தூக்கம் போய்விட்டது. பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரையில் எங்களுக்கு தூக்கம் இல்லை. மானமிகு சுயமரியாதைக்காரர்களுக்கும், இரக்கமற்ற சர்வாதிகாரிகளுக்கும் நடக்கும் போர் தான் இந்த தேர்தல். இதில் இந்தியா கூட்டணி ஜெயிக்க தமிழகம் ஆரம்ப புள்ளியாக இருக்கும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

இந்தியாவின் ஏவுகணை சோதனை..!

tharshi

முன்பதிவு செய்தும் இருக்கை கிடைக்காததால் ரெயிலின் கதவு கண்ணாடியை உடைத்த பயணி..!

tharshi

London: Indian diaspora’s call to boycott China joined by Iranians, Pakistanis

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy