முன்னாள் பிரதமர் டாக்டர் மகதீர் முகமதுவின் மனைவியான டாக்டர் ஹஸ்மா அலி, இன்று தேசிய இதய நிறுவனத்தில் (IJN) காலமானார்.
அவர் கடந்த ஜூலை 12 ஆம் திகதி தனது 100 வயதை நிறைவு செய்தார். அவரது மகன் மொக்ஸானி மகாதீர், அவரது மறைவை உறுதிப்படுத்தினார் என பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
சித்தி ஹஸ்மா என்று பரவலாக அறியப்பட்ட ஹஸ்மா, 1950களின் மத்தியில் பணியாற்றத் தொடங்கியபோது, முதல் மலாய் பெண் மருத்துவர்களில் ஒருவராக இருந்ததார் என கூறப்படுகிறது.
டாக்டர் மகாதீரும் டாக்டர் ஹஸ்மாவும் மருத்துவப் படிப்பு பயிலும்போது சந்தித்தனர். அவர்கள் இருவரும் 1956இல் திருமணம் செய்தனர். மேலும் ஓகஸ்ட் மாதம் அவர்கள் திருமணத்தின் 70 ஆண்டுகளைக் கொண்டாடினர். மகதீர் – ஹஸ்மா தம்பதியருக்கு நான்கு சொந்தப் பிள்ளைகளும் மூன்று தத்துப் பிள்ளைகளும் உள்ளனர்.
2024இல், ஹஸ்மா ஒரு நேர்காணலின் போது, தனக்கு “சித்தி” என்ற பெயர் இருந்ததில்லை என்றும், 1990களில் அப்பெயரின் புகழ் அதிகரித்ததால் மற்றவர்களால் தனக்கு அப்பெயர் சூட்டப்பட்டது என்றும் தெளிவுபடுத்தினார்.
அதன்பிறகு அவர், தன்னை டாக்டர் ஹஸ்மா என்று அறியப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அவரது மறைவையிட்டு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் –
நாட்டிற்கும் மக்களுக்கும் ஆற்றிய சேவைகளை நாம் என்றும் நினைவுகூருவோம். அவருக்கு நாட்டுத் தலைவர்களுக்குரிய இறுதிச்சடங்கு மரியாதை வழங்கப்பட வேண்டும்.- என்று தெரிவித்துள்ளார்.
அவரது இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசாங்கத் தலைமைச் செயலாளர் மற்றும் ஆயுதப்படைத் தளபதி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஹஸ்மா பிரதமரின் துணைவியாராக இருந்த காலத்திலும் பல்வேறு சமூக மற்றும் நலத்திட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றவர். பொதுமக்களின் பிரச்சினைகள் மீது அக்கறை காட்டியதுடன், நாட்டிற்குப் பல்வேறு வழிகளில் சேவையாற்றிய முக்கியமான பெண் ஆளுமையாகவும் அவர் திகழ்ந்தார் என பிரதமர் நினைவுகூர்ந்தார்.
அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரதமர் மகதீர் மற்றும் குடும்பத்தினருக்கும் தனது அனுதாபத்தைத் தெரிவித்தார். இறுதி மரியாதை மற்றும் நல்லடக்க நிகழ்வில் தாம் பங்கேற்கவுள்ளார் எனவும் கூறினார்.
