கனடாவின் வடக்கு சாஸ்காட்செவன் பகுதியில் வேட்டைக்குச் சென்று மாயமான இருவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மற்றொருவரைக் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாகத் தொடர்கின்றன. கடந்த ஒக்ரோபர் 18ஆம் திகதி, வேட்டைக்குச் சென்ற இருவரும் திட்டமிட்டபடி வீடு திரும்பாததால், அவர்கள் மாயமானது குறித்து பிளாக் லேக் ராயல் கனடியன் மவுண்டட் பொலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் உடனடியாக அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தேடுதல் வேட்டையின் போது, பிளாக் லேக் பகுதிக்கு தெற்கே உள்ள நீர்நிலைப் பகுதியில் ஆளில்லாத காலியான படகு ஒன்றின் அருகே நபர் ஒருவர் சடலமாகக் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
விசாரணையில், அவர் மாயமான வேட்டைக்காரர்களில் ஒருவர் என்பது உறுதிசெய்யப்பட்டு, அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் இவரது இறப்பில் எவ்வித சந்தேகமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாஸ்காட்செவன் மரண விசாரணை அதிகாரி சேவை அமைப்பு இவரது உயிரிழப்பிற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகிறது.
பிளாக் லேக் பகுதிக்கு தெற்கே உள்ள தொலைதூரப் பகுதியில் மாயமான இரண்டாவது வேட்டைக்காரரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் நடந்த பிளாக் லேக் பகுதியானது, சாஸ்கடூன் நகரத்திலிருந்து வடக்கே சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும்.
