Sangathy
News

காஸா மருத்துவமனை மீதான தாக்குதலுடன் இஸ்ரேலுக்கு தொடர்பில்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபை தெரிவிப்பு

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார்.

இஸ்ரேல் மீதான தாக்குதலை ‘சொல்ல முடியாத, கொடூரமான பயங்கரவாதச் செயல்’ என்று பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளதுடன், இஸ்ரேல் மக்களுடன் இங்கிலாந்து நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது 13 ஆவது நாளாக இஸ்ரேல் இராணுவம் குண்டு மழை பொழிந்து வருகிறது.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், பாலஸ்தீனத்திற்கு அரபு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இரு தரப்பினரின் தீவிர தாக்குதலால் இதுவரை ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சென்றுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதிபர்  ஐசக் ஹெர்சாக் ஆகியோருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று (18) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆலோசனை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின் போது கூட காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாததால், பைடனுடனான பேச்சுவார்த்தையை அரபு நாட்டுத் தலைவர்கள் இரத்து செய்தனர்.

இந்நிலையில், காஸாவில் உள்ள மருத்துவமனை மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பொதுவாக எந்தவொரு போரிலும் மனிதாபிமான அடிப்படையில் மருத்துவமனைகள் தாக்கப்படுவது தவிர்க்கப்படும்.

ஆனால் அதற்கு மாறாக, காஸா மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தியமைக்காக இஸ்ரேலுக்கு எகிப்து, ஜோர்தான், சவுதி அரேபியா, பக்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகள் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ஐ.நா. மற்றும் அதன் மூத்த தலைவர்களும் இஸ்ரேலின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எனினும்,  காஸாவில் உள்ள அல் ஆஹ்லி மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதில், மருத்துவமனையில் இருந்த சுமார் 500 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் காரணமில்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரின் வாட்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க அரசு செய்த ஆய்வின் படி காஸா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பாகாது என்பது தெரியவந்துள்ளது. நாங்கள் கிடைத்த செய்திகள், உளவுத்துறை அறிக்கைகள், ஏவுகணையின் செயல்பாடு, புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் இதனை உறுதி செய்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் வீசிய ராக்கெட்கள் தவறுதலாக வீழ்ந்து வெடித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டது.

இஸ்ரேலுக்கு சென்று அந்நாட்டு அதிபர், பிரதமரை சந்தித்து ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலும் காஸா மருத்துவமனை தாக்குதலுக்கும் இஸ்ரேலுக்கு தொடர்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்தில் மக்களுக்கு உதவும் வகையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் ஏராளமான மக்கள் வாஷிங்டனில் திரண்டனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், காஸா பகுதியில் இருக்கும் மக்களைக் காக்கும் வகையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வலியுறுத்தி, வாஷிங்டன் DC-யில்  உள்ள கேனான் ரோட்குண்டா பகுதியை ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த திடீர் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 300 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உடனடியாக போர் நிறுத்த அறிவிப்பை வலியுறுத்தி கோஷமிட்டனர். சிலர் போர் நிறுத்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையானோர் யூத அமைப்புகளை சேர்ந்தவர்களாக இருந்தனர்.

Related posts

காலி சிறைச்சாலையில் இருந்து கைதிகளை வெளியே அழைத்துச்செல்ல தற்காலிகத் தடை

Lincoln

இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள 300 முதல் 400-க்கு இடைப்பட்ட பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன

Lincoln

Moose Clothing Company becomes Sri Lanka cricket Team Sponsor

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy