Sangathy
News

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான்-3

Colombo (News 1st) இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்துடன் LVM 3 (GSLV Mk III) ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

ஆந்திர மாநிலம் – ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து சரியாக பிற்பகல் 2.35 மணிக்கு ஏவுகணை விண் நோக்கி பாய்ந்தது.

சந்திரயான் விண்கலத்தைச் சுமந்துகொண்டு சென்ற LVM 3- M4 ஏவுகணையின் இரண்டு அடுக்குகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக பிரிந்த நிலையில், தற்போது மூன்றாவது அடுக்கும் வெற்றிகரமாக பிரிந்துவிட்டது.

இதனையடுத்து,  பூமியிலிருந்து 179 கிலோமீட்டர் தொலைவில், நீள் வட்டப்பாதையில் சந்திரயான் – 3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான 25.30 மணி நேர Countdown நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கியது. எரிபொருள் நிரப்பும் பணிகளும், இறுதிக்கட்டப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை ISRO விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடா்ந்து இந்தியா மூன்றாவது முறையாக நிலவை ஆய்வு செய்ய முன்னெடுத்துள்ள இந்த முயற்சி, உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈா்த்துள்ளது.

சந்திரயான்-3 திட்டத்தை 615 கோடி இந்திய ரூபா செலவில் ISRO வடிவமைத்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக மொத்தம் 3,895 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் -3 விண்கலத்துடன் உந்து கலன் (Propulsion Module), Lander மற்றும்  Rover கலன்கள் பயணிக்கின்றன.

சந்திரயான்-2 திட்டத்தில் அனுப்பப்பட்ட Orbiter ஏற்கனவே நிலவைச் சுற்றி வருகிறது. அதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் என்பதால் இந்த முறை Orbiter-ஐ IRSO விண்ணுக்கு அனுப்பவில்லை.

தற்போது அனுப்பப்பட்டுள்ள Lander மற்றும்  Rover கலன்கள் உந்து கலன் (Propulsion Module) மூலம் புவி வட்டப் பாதையிலிருந்து நிலவின் சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்லப்படும். அதன் பின் உந்து கலனிருந்து லேண்டா் பிரிந்து நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். ஆகஸ்ட் இறுதியில் தான் நிலவில் அது இறங்கும். தொடா்ந்து லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் 14 நாள்கள் நிலவின் தன்மையையும், சூழலையும் ஆய்வு செய்யவுள்ளன.

இந்த விண்கலத்தில் மொத்தம் 7 விதமான ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நிலவுக்கு சென்றவுடன் தனித்தனியாக ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன.

இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து, நிலவில் தடம் பதித்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா வசமாக்கிக்கொள்ளும்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் திகதி நிலவின் தென்துருவத்திற்கு சந்திரயான்-2 விண்கலம் அனுப்பப்பட்டது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு சந்திரயான்-2 கலம், அதே ஆண்டு செப்டம்பா் மாதம் நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி  Lander  கலன் தரையிறங்காமல் நிலவின் தரைப்பரப்பில் வேகமாக மோதி செயலிழந்தது.

இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, ISRO தலைவர் சோம்நாத் உரையாற்றினார். இதன்போது,  புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சந்திரயான் – 3 விண்கலத்தின் இயக்கம் திருப்திகரமாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

சந்திரயான்-3  விண்கலம் ஏவுதலை பார்வையிட ஏராளமான பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் கூடியிருந்தனர்.

Related posts

Cabinet nod for Electricity Tariff hike in January and June 2023

Lincoln

People can no longer be fooled with false promise– Cardinal

Lincoln

Trade unionists see tax concessions as a ruse to divide professionals

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy