Sangathy
News

புலம்பெயர்ந்தோரின் முதலீடுகள் வேண்டுமானால் மாகாண சபைகள் முழு அதிகாரத்துடன் இயங்க வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கை

Colombo (News 1st) புலம்பெயர்ந்தோரின் முதலீடுகள் வேண்டுமானால் மாகாண சபைகள் முழுமையான அதிகாரத்துடன் இயங்க வேண்டும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை கோரி நிற்கும் ஜனாதிபதி, மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை முழுமையாக வழங்குவதற்கு முன்வர வேண்டும் என அவர் அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி கூறுவதைப் போன்று, பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான நிலங்களை பகிர்ந்தளிப்பது தொடக்கம் முதலீடு செய்ய முன்வருபவர்களுக்கான சகல சலுகைகளையும் வழங்கக்கூடிய அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார். 

வெறுமனே பல்கலைக்கழகங்கள் மாத்திரமன்றி, சர்வதேச தரம் வாய்ந்த வைத்தியசாலைகள், விவசாயம் , கடல் வளங்களை உள்ளடக்கிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான வலுவான திட்டங்கள், உற்பத்திசார் தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றை செயற்படுத்துவதற்கும் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையூடாக கோரிக்கை விடுத்துள்ளார். 

மாகாண சபைகள் தீர்மானம் இயற்றும் நிறுவனங்களாக இல்லாமல், சட்டமியற்றும் நிறுவனங்களாக மாற வேண்டும் எனவும் அப்போதே புலம்பெயர் தமிழர்கள் அச்சமின்றி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவார்கள் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லா மாகாண சபை தேர்தல்களையும் நடத்துவதில் நெருக்கடிகள் நிலவுமாயின், குறைந்தபட்சம் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல்களையேனும் நடத்த வேண்டும் எனவும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். 

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு புலம்பெயர்ந்தவர்களது முதலீடுகள் தேவை என்பதை ஜனாதிபதி விரும்பினால்  முதலீடுகள் பாதுகாப்பாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இன்றைய சூழலில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழ் மக்கள் ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்திரேலிய நாடுகளில் வாழ்வதாகவும் அவர்கள் பொருளாதாரத்தில் கணிசமான முன்னேற்றத்தைக் கொண்டு வருபவர்களாக திகழ்வதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related posts

மின்சாரம், எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

John David

WHO experts to visit China as part of investigation to find origins of Covid-19

Lincoln

Expat SL workers send more money

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy