Sangathy
News

இலங்கை அரசை இந்திய அரசு வௌிப்படையாக கண்டிக்காதது ஏன்: மு.க.ஸ்டாலின் கேள்வி

Colombo (News 1st) படகுகளை பறிமுதல் செய்து அரசுடைமையாக்கிவிட்டதாக  இலங்கை அரசு அறிவிக்கும் நிலையில், இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக, வெளிப்படையாக இதனை கண்டிக்காதது ஏன் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் – கன்னியாகுமரியில் நேற்று (15) நடைபெற்ற  பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவித்த கருத்துகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில் எதிர்ப்பினை வௌியிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் செய்த செயல்களாலேயே, இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு உள்ளாகின்றார்கள் என பிரதமர் பதவியில் இருக்கும் நரேந்திர மோடி கூறியுள்ளதாக தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க. அரசின் கடும் எதிர்ப்பையும் மீறியே, கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். இந்த நிலையில்,  நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசால் மற்றுமொரு நாட்டுக்கு வழங்க முடியும் என நம்பும் அளவுக்கு பிரதமர் அப்பாவியாக இருக்கிறாரா என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கச்சத்தீவை மீட்பதற்கு கடந்த 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதாக் கட்சி அரசு எடுத்த நடவடிக்கை என்ன எனவும், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு உள்ளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன் எனவும் அவர்கள் இந்தியர்கள் இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் வழங்கிய ஒன்றிய பாரதிய ஜனதாக் கட்சி அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய் திறக்காதது ஏன் எனவும் வினவியுள்ளார்.

இதேவேளை, மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்தியா – இலங்கை இடையேயான கூட்டு நடவடிக்கை குழுவை விரைவில் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாவும் அவர்  தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 15 இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

படகுடன் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஊகாவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அஸ்வெசும பயனாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி அனுமதி

John David

Another water tariff hike in the pipeline?

Lincoln

Proposed Law Breaks Government Pledge to End Abuse’ – HRW

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy