யால வனப் பகுதியில் மறைமுகமாக நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை தேடும் நடவடிக்கையொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஐந்து நாட்களாக மேற்கொண்டிருந்தனர்.
அதற்காக புத்தள, சியம்பலாண்டுவ மற்றும் பசறை முகாம்களில் இருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கூட்டு நடவடிக்கையாக, விலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள், துப்பாக்கிகள், வனப்பகுதிக்கு தீங்கு விளைவிப்போரை தேடி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது, அதிநவீன ட்ரோன் கமெரா தொழில்நுட்பம் மற்றும் விசேட பயிற்சிகளை மேற்கொண்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை, சீட்டா படையினர் இணைந்து, யால வளப்பகுதிக்குள், ஏறக்குறைய ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா பயிர்ச் செய்கையில் ஆறு அடி உயர 346,000 கஞ்சா செடிகள், குற்றச் செயல்களுக்காக மறைந்திருந்த மூன்று சந்தேக நபர்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிப்பான இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 30.450 கிலோ உலர்ந்த கஞ்சாவை ஆகியவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அத்திமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.