Sangathy
News

மத்திய வங்கி சட்டமூலத்தை வியாழக்கிழமை விவாதத்திற்கு எடுக்க தீர்மானம்

Colombo (News 1st) மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்றும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலத்தை எதிர்வரும் வியாழக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்றுவதாக இருந்தால் பல சரத்துகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மத்திய வங்கி சட்டமூலத்திற்கு என்ன நடக்கப்போகின்றது?

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியளவில் சர்வதேச நாணய நிதிய பணிக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தயாரிக்கப்பட்ட மத்திய வங்கி சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்படவேண்டும் என விரிவாக்கப்பட்ட கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கான இணக்கப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தை ஆட்சேபித்து பல்வேறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் நான்காம் திகதி தமது தீர்மானத்தை பாராளுமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

நிர்வாக, நிதி சுயாதீனத்தன்மையுடன் கூடிய மத்திய வங்கியொன்றை ஸ்தாபிப்பதற்காகவே புதிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

நிர்வாக சபை, நிதிக் கொள்கை சபை என்ற இரு பிரிவுகளை ஏற்படுத்தவும் சட்டமூலத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஆளுநரின் தலைமையிலான நிர்வாக சபைக்கு பொருளியல், வங்கியியல், நிதி, கணக்கியல், கணக்காய்வு சட்டம் அல்லது ஆபத்து முகாமைத்துவம் தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற 6 பேரை நியமிக்க வேண்டும்.

வங்கி மேற்பார்வை, கொள்கை தயாரிப்பு என்பன நிர்வாக சபை ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளதுடன் எந்தவொரு நிறைவேற்று பொறுப்பும் அதன் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதிக் கொள்கை தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் சட்டமூலத்தின் ஊடாக நிதி கொள்கை சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் அந்த சபையினதும் தலைவராக செயற்படவுள்ளதுடன் நிர்வாக சபையில் உள்ள 6 உறுப்பினர்களும் இதில் அங்கம் வகிப்பார்கள்.

பொருளியல் அல்லது நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்ற இருவரும் விலை ஸ்திரத்தன்மைக்கு பொறுப்பான மத்திய வங்கி பிரதி ஆளுநர், நிதிக் கட்டமைப்பு ஸ்திரத்தன்மைக்கு பொறுப்பான மத்திய வங்கி பிரதி ஆளுநர் ஆகியோரையும் நிதிக் கொள்கை சபைக்கு நியமிக்க வேண்டியுள்ளது.

துறைக்கு பொறுப்பான அமைச்சர் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து, ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவையின் அனுமதிக்காக பரிந்துரைத்து இந்த நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சாதாரண பெரும்பான்மையால் சட்டமூலத்தை நிறைவேற்றுவதாக இருந்தால் சட்டமூலத்தில் உள்ள பல சரத்துகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவி நீக்கம் தொடர்பிலும் உயர் நீதிமன்ற தீர்ப்பில் சில திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முழுமையாக சுயாதீன நிறுவனமாக செயற்படுவதற்குள்ள இயலுமை தொடர்பாகவும் உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கி சட்டம் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

எனினும் இந்த சட்டமூலம் தொடர்பாக போதுமானளவு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதா?

இந்தளவு கடினமான சட்டத் திருத்தம் தொடர்பாக குறைந்தது பாராளுமன்றத்திற்குள்ளும் பாராளுமன்றத்திற்கு வௌியிலும் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் போதுமானதா?

புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின் காரணமாக பல திருத்தங்களை அந்த சட்டமூலத்தில் சேர்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அவசரமாக நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சிக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் தொடர்பில் சமூகத்தில் ஏற்பட்ட கருத்தாடலினால் அந்த சட்டமூலத்தை ஒத்திவைக்க நேரிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தின் கேந்திர நிலையமாக விளங்கும் மத்திய வங்கி தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள சட்ட திருத்தங்கள் தொடர்பில் இதனை விடவும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லவா?

Related posts

Portrait of St. Joseph Vaz unveiled

Lincoln

Adani-JKH project gets underway

Lincoln

Crucial for SL to restructure foreign debt by Sept. 27: Patali

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy