Sangathy
News

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதி

Colombo (News 1st) இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த சாந்தன், திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி அரச மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

54 வயதான சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் தங்கியிருந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

சுதந்திர ராஜா என்ற இயற்பெயர் கொண்ட சாந்தன், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

எனினும், இவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால், அவருடைய சொந்த நாட்டில் இருந்து ஒப்புதல் கிடைத்த பின்   அனுப்புவதற்கான நடைமுறைகள் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சாந்தனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாந்தனுக்கு இரண்டு கால்களிலும் வீக்கம் ஏற்பட்டு அவதியுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக திருச்சி முகாமில் இருக்கும் சாந்தன், சொந்த நாடான இலங்கைக்கு செல்ல அனுமதிக்குமாறு பிரதமர் மோடி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை துணை தூதர், வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட பலருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கடந்த 32 வருடங்களாக தனது தாயாரைப் பார்க்கவில்லை எனவும் அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவரோடு கூட வாழ விரும்புவதாகவும் ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் தன்னை இலங்கைக்கு அனுப்பக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு, நிலுவையில் உள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

யாழ். கரைநகர் இளைஞன் லண்டனில் குத்திக்கொலை

Lincoln

Plastic pollution flowing into oceans to triple by 2040: Study

Lincoln

கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தேவையான தூதரக நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மீண்டும் கோரிக்கை

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy