Sangathy
News

கனடா – இந்தியா உறவில் பதற்றம்; தூதரக அதிகாரிகள் வௌியேற்றம்

 

Colombo (News 1st) கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

கனடாவை சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், இந்திய அரசு இருக்கலாம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்ததையடுத்து, இந்நிலை தோன்றியுள்ளது.

மேலும், இந்திய தூதரக அதிகாரி ஒருவரையும் கனடா வெளியேற்றியுள்ளது.

எவ்வாறாயினும், கனடாவின் இந்த குற்றச்சாட்டை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது. கனேடிய தூதரக அதிகாரி நாட்டை விட்டு வௌியேற வேண்டும் எனவும் இந்தியா உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவிற்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதுடன், இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

காலிஸ்தான் குழுவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனடாவிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத்தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளதாகக் கூறி கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகைப்படங்களுடன் போஸ்டர் ஒட்டினர்.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் உரையாற்றிய கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அரசாங்க முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலைக்கும் “நம்பகமான” தொடர்பு இருப்பதை கனடா உளவுத்துறை கண்டுபிடித்துள்ளதாக கூறினார்.

“கனடா மண்ணில் ஒரு கனேடிய குடிமகன் கொல்லப்பட்டதன் பின்னணியில் எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்தின் தலையீடும் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அது தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறும் செயல்,” எனவும் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டார்.

ஆனால், நிஜார் கொலையில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என இந்தியா மறுத்துவிட்டது.

கனடாவின் வான்கூவர் நகருக்கு கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்ரே என்ற ஊரிலுள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் கார் நிறுத்துமிடத்தில் வைத்து கடந்த ஜூன் மாதத்தில் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்டார்.

முகமூடி அணிந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

பிரிவினைவாத போராளிக் குழுவுக்கு தலைமை தாங்கிய ஒரு பயங்கரவாதி என்று நிஜார் குறித்து இந்தியா முன்பு விபரித்திருந்தது. ஆனால், அவரது ஆதரவாளர்கள் இந்தியாவின் குற்றச்சாட்டுகள் “ஆதாரமற்றவை” என்று தெரிவித்துள்ளனர்.

Related posts

யாழில் தீவிரமடைந்து வரும் டெங்கு – மூவர் உயிரிழப்பு

Lincoln

எதிர்வரும் 29 ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாட தீர்மானம்

Lincoln

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு உடனடி தீர்வு கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டப் பேரணி

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy