Sangathy
News

மீனவர் பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: தமிழக முதல்வருக்கு இந்திய மத்திய

Colombo (News 1st) இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் விடயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தமிழக அரசாங்கத்திடம் இந்திய மத்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக தமிழகத்தின் The Hindu நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது. 

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திய வௌிவிவகார இணை அமைச்சர் வி. முரளிதரனுக்கு கடிதம் எழுதியிருந்தார். 

அந்த மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நிலையில், இவ்வாறான தொடர்ச்சியான கைதுகள் மீனவ சமூகத்தினரிடையே மிகுந்த மன உளைச்சலையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

2023 ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் தமிழகத்தை சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 10 மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, இந்த செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தொடர்ந்தும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக உரிய நிலையான தூதரக வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் மீண்டும் வலியுறுத்துவதாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலுக்கு அமைய, திமுக பாராளுமன்ற உறுப்பினர் T.R.பாலு , ராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் K. நவாஸ் கனி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவ சங்கத்தை சேர்ந்த N.J.போஸ், பி. சேசுராஜா, R. சகாயம் ஆகியோர் இந்திய மத்திய வௌிவிவகார இணை அமைச்சர் V. முரளிதரனை நேற்று நேரில் சந்தித்து அவரது கடிதத்தை கையளித்துள்ளனர். 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தினை பெற்றுக்கொண்டு, அவர்களது கோரிக்கைகளை வௌிவிவகார இணை அமைச்சர் V. முரளிதரன் கேட்டறிந்துள்ளதாக The Hindu நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது. 

இது குறித்த முதலமைச்சரின் கடிதம் ஏற்கனவே தமது துறைக்கு கிடைத்துள்ளதாகவும், அதனடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இணை அமைச்சர் V. முரளிதரன் தெரிவித்துள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இலங்கை அதிகாரிகளுடன் இது தொடர்பாக மத்திய அரசின் சார்பில் தொடர்ந்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

3 மாவட்டங்களில் டெங்கு அபாயம் அதிகரிப்பு

John David

Elections will be held in accordance with the Constitution, Presidential poll in 2024 – President

John David

22 A: Amendments accepted at ‘committee stage’ should be subjected to SC approval

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy