பொலன்னறுவை, கிரித்தலே யாய பகுதியில் நேற்று (14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 17 வயது இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
40 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும், அவருக்கும் உயிரிழந்த இளம்பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு 8.45 மணி அளவில் இந்த துப்பாக்குச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலையுண்ட இளம்பெண் சிறிது காலத்திற்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய நபருடன் உறவில் இருந்துள்ளதாகவும், பின்னர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருடன் வாழ்வதற்கு ஒரு வீட்டிற்குச் சென்றார்.
இருப்பினும் குறித்த நபரினால் ஏற்பட்ட தொந்தரவு காரணமாக, சில வாரங்களுக்கு முன்பு இளம்பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
பின்னர், தன்னுடன் வாழ மீண்டும் வருமாறு குறித்த நபர் இளம்பெண்ணை பல சந்தர்ப்பங்களில் வற்புறுத்திய போதிலும், இளம்பெண் தனது சம்மதத்தை தெரிவிக்கவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் குறித்த இளம்பெண் நேற்று இரவு தனது தாயாருடன் பக்கத்து வீடொன்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது 40 வயதுடைய சந்தேக நபர் இளம் பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
கொலையைச் செய்த சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரைக் கண்டுபிடிக்க மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.