தனது சொந்த தங்கையின் திருமணத்திற்காக அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்த அண்ணனை, அவரது மனைவியின் குடும்பம் அடித்தே கொலை செய்த பயங்கர சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவருக்கு சாபி (29) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த சூழலில், சந்திர பிரகாஷின் ஒரே தங்கைக்கு வரும் 26-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி, தங்கையின் திருமண செலவில் பாதியை சந்திர பிரகாஷ் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. கையில் பணம் இல்லாததால் வட்டிக்கு கடன் வாங்கி செலவுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார் சந்திர பிரகாஷ்.
இதனிடையே, திருமணத்தின் போது தங்கைக்கு பரிசளிக்க திட்டமிட்ட சந்திர பிரகாஷ், தனது மனைவியிடம் இதுபற்றி பேசியுள்ளார். அதற்கு அவரது மனைவி சாபி, இப்போதுதான் வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்து வருகிறீர்கள். எனவே சாதாரணமாக ஏதாவது பரிசாக கொடுத்தால் போதும் எனக் கூறியுள்ளார்.
ஆனால் சந்திர பிரகாஷ் இதை ஏற்கவில்லை. “எனக்கு இருப்பது ஒரே தங்கை. அவளுக்கு நான் சாதாரணமான பரிசை வழங்கினால் நன்றாக இருக்காது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், 3 பவுனுக்கு தங்க மோதிரமும், 1 லட்சம் மதிப்பிலான டிவியையும் தனது தங்கைக்கு வாங்க முடிவு செய்துள்ளதாக தனது மனைவியிடம் கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. “பெற்ற பிள்ளைகளுக்கு நகை சேர்க்க முடியவில்லை.. இதில் தங்கைக்கு நகை வாங்க போறீங்களா?” என்று கேட்டுள்ளார்.
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, தனது அண்ணன்களுக்கு போன் செய்த சாபி, நடந்த விஷயத்தை கூறியுள்ளார். மேலும், இதுபற்றி கேட்டால் தன்னை சந்திர பிரகாஷ் அடிப்பதாகவும் தெரிவித்தார் சாபி. இதனால் ஆத்திரமடைந்த சாபியின் 4 அண்ணன்களும் அவரது வீட்டுக்கு கிளம்பிச் சென்றுள்ளனர். எங்கள் தங்கைக்கு நகை வாங்கிக் கொடுக்க முடியல.. இதில் உன் தங்கச்சிக்கு 3 பவுனில் மோதிரம் வாங்கி கொடுப்பாயா எனக் கேட்டு இரும்பு ராடை கொண்டு சந்திர பிரகாஷை அவர்கள் தாக்கியுள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சந்திர பிரகாஷ், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு வந்து சந்திர பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை கொலை செய்த சந்திர பிரகாஷின் மனைவி சாபியின் அண்ணன்களையும், சாபியையும் போலீஸார் கைது செய்தனர். சொந்த தங்கைக்கு தங்க மோதிரம் பரிசளிக்க முடிவு செய்த அண்ணனுக்கு அவரது மனைவி முடிவுரை எழுதிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது